Wednesday, January 28, 2009

அந்த அதிகாலை .

ஆரம்பிப்பதற்கு
முன்பே
அலுத்துவிடுகிறது
வாழ்க்கை .

குழப்பங்கள்
குமியடிக்க
ஒரு குழந்தையைப்போல்
சுருண்டு உறங்கினேன்

சற்றே மாற்றத்துடன் விடிந்தது
அந்த அதிகாலை

புதிய நபரை
பார்த்த பின்னும்
வள் வள்ளென்று,
குறைக்காத நாய்

தேடாமலே
கிடைத்துவிட்ட செருப்பு
பள்ளி செல்ல
அடம் பிடிக்காத குழந்தைகள்.

குற்றம் கூறி
சண்டை பிடிக்காத மனைவி .


நேரம் தவறாமல் வந்து
நெரிசல் இல்லாத பேருந்து

வியர்வையில் கசங்காத
என் சட்டை .

வணக்கம் சொல்வதற்கு முன்பே
புன்னகையுடன் கைகுலுக்கும் மேலாளர்.

தலைவலிக்கும் முன்பே
கிடைத்த தேனிர்.

தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட
குறுஞ்செய்தி நண்பர்கள் .

போக்குவரத்த்கு
நெரிசல் இல்லாத
சாலைகள்

நுழைவதற்குள்ளகவே
கனிவுடன்
வரவேற்கும்
மனைவி

அன்றைய சமையலில்
எனக்கு பிடித்த உணவு

விளம்பரம் இல்லாத
தொலைக்காட்சித் தொடர்கள்.

சே !
என்னடா ஆச்சு இந்த உலகத்துக்கு ?

தொல்லையின்
வாய் வழி
பிதுங்கி வருவது தானே
வாழ்கை .

கட்டிலின் விளிம்பினின்று
புரண்டு விழுகிறேன்
நான் கீழே விழுந்ததை விட ,
தன் தூக்கம் கலைந்ததாய்
மனைவி கதறுகிறாள் .

ஆஹா
நான் சராசரி வாழ்க்கைக்கு
வந்து விட்டேன்.

இனியவன் . ஜி . இளையராஜா .

No comments:

Post a Comment