Saturday, March 14, 2009

அலையில் ஆடும் படகு

பேசிக்கொள்ளாமலேயே
நீயும் நானும்
வெகு நேரம் அமர்ந்திருக்கிறோம் ,
உரக்க கத்திப் பெய்கிறது மழை .

புத்தகங்களை பல முறை
பரிமாறிக் கொள்கிறோம்
அதென்னவோ
உன்னிடம் இருந்து திரும்புகையில்
என் புத்தகத்திற்கு
சிறகு முளைத்து விடுகிறது .

அன்றைக்கு நீ
ஏதேதோ கதைச் சொல்லி
சிரித்துக் கொண்டே இருக்கிறாய்
அசைவற்று நிற்கிறேன்
உன் அசைவில்.

எல்லோரிடமும் பென்சில் வாங்கி
திருப்பி தந்திருக்கிறாய்
என்னிடம் இருந்து
நீ வாங்கியது ஒருமுறைதான்
அதை ஏன் திருப்பி தரவே இல்லை?

விளையாட்டாய்
உன் தோழி சடையை பிடித்து இழுக்க ,
நீ தான் இழுத்தாய்
என சண்டை போட்டாயே
அன்று முதல்
ஆரம்பித்தது
உன் மீதான
என் உட்கிரகிப்புகள் .

அன்று நீ அழகாக
பாடியபோது
ஆசிரியர் முதல் அனைவரும் கை தட்ட
நான் உன்னை பாராட்டவே இல்லை
ஏனென்று இதுவரை தெரியவில்லை
அதைப் பற்றி நீயும் கேட்கவே இல்லை .

உன் தந்தைக்கு
வேலை மாற்றல்
வேறொரு ஊருக்கு
நீ பயணிக்கிறாய் .
எப்போதும் போல
நீ சிரித்து விட்டு செல்கிறாய்
நானோ
அலையில் ஆடும் படகாய்.

இனியவன்.ஜி.இளையராஜா

எண்ணக் குமிழ்கள் 5

பெறுவோம் பொறுப்பு அடைவோம் சிறப்பு .

எதையோ பேர் இந்த நாட்டை ஆண்டார்கள் ,போரில் எத்தனையோ பேர் மாண்டார்கள் .

வரலாற்றில் நிற்பது ஒரு சிலர் தானே .ஆணைக்கு அடிபனிபவனாக இருப்பதா? ஆணையிடுபவனாக இருப்பதா ?

முடிவு உன் கையில் .

ஒரு சீன பொதுமொழி ,
டிராகனின் வாலாயிருப்பதா ?
கோழியின் தலையாய் இருப்பதா?

வாலாயிருந்தால் ,ஏதேனும் ஒரு தலையை பின் தொடர வேண்டும் .
தலையாய் இருப்பின் என்ன செய்ய வேண்டும் என்பதை ,நீ தீர்மானிக்க வேண்டும் .

பொறுப்புகள் உன் மீது திணிக்கப் பட்டிருந்தாலும் ,
பொறுப்புகளை நீயாக எடுத்துக் கொண்டாலும் ,

குழுவாக செயல்பாடு ,குறைகளைப் பிரித்தெடு,நிறைகளை குறிப்பிடு .

ஒன்று முக்கியம் ,
முதலில் கற்றுக்கொள் ,பிறகு பெற்றுக்கொள் .


இனியவன். ஜி .இளையராஜா

எண்ணக் குமிழ்கள் 4

கொள்கை கொள் .

இலக்கு இல்லாமல் பயணிக்கும் அம்பு வெற்றியை நிர்ணயிக்குமா ?

பிறந்து விட்டோம் என்று வாழாதே ,நீ பிறந்ததே வாழ்வதற்குத்தான் .

வாழ்க்கை உன்னை எடுத்துச் செல்வதா ? இல்லை ,நீ வாழ்வை எடுத்துச் செல் .
எது வேண்டும் ?எது வேண்டாம் முடிவு செய் .

ஒரு பாறையில் தேவையானதை மட்டும் வரைந்தால் , அது ஓவியம் .
தேவையில்லாததை நீக்கி விட்டால் , அது சிற்பம் .

சிற்பம் வரைவதாயினும் ,ஓவியம் வரைவதாயினும் முதலில் நீ தீர்மானிக்க வேண்டும் .

ஒரு பேருந்து நிலையம் ,
எங்கு செல்வது என்று தெரியாமலேயே நீ சுற்றிக் கொண்டிருந்தால், என்றைக்கும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் .

எந்த ஊருக்கு போவது என்பதை தீமானித்து விட்டால் ,எப்படி அதை சுலபமாக அடைவது ?

அதற்கான முயற்சிகளில் இறங்குவோமானால் , இலக்கை அடைவது எளிது .

கொள்கை கொள் ,தொடு வில் ,வெற்றி இல்லை தொலைவில் .

இனியவன். ஜி .இளையராஜா