Saturday, March 14, 2009

அலையில் ஆடும் படகு

பேசிக்கொள்ளாமலேயே
நீயும் நானும்
வெகு நேரம் அமர்ந்திருக்கிறோம் ,
உரக்க கத்திப் பெய்கிறது மழை .

புத்தகங்களை பல முறை
பரிமாறிக் கொள்கிறோம்
அதென்னவோ
உன்னிடம் இருந்து திரும்புகையில்
என் புத்தகத்திற்கு
சிறகு முளைத்து விடுகிறது .

அன்றைக்கு நீ
ஏதேதோ கதைச் சொல்லி
சிரித்துக் கொண்டே இருக்கிறாய்
அசைவற்று நிற்கிறேன்
உன் அசைவில்.

எல்லோரிடமும் பென்சில் வாங்கி
திருப்பி தந்திருக்கிறாய்
என்னிடம் இருந்து
நீ வாங்கியது ஒருமுறைதான்
அதை ஏன் திருப்பி தரவே இல்லை?

விளையாட்டாய்
உன் தோழி சடையை பிடித்து இழுக்க ,
நீ தான் இழுத்தாய்
என சண்டை போட்டாயே
அன்று முதல்
ஆரம்பித்தது
உன் மீதான
என் உட்கிரகிப்புகள் .

அன்று நீ அழகாக
பாடியபோது
ஆசிரியர் முதல் அனைவரும் கை தட்ட
நான் உன்னை பாராட்டவே இல்லை
ஏனென்று இதுவரை தெரியவில்லை
அதைப் பற்றி நீயும் கேட்கவே இல்லை .

உன் தந்தைக்கு
வேலை மாற்றல்
வேறொரு ஊருக்கு
நீ பயணிக்கிறாய் .
எப்போதும் போல
நீ சிரித்து விட்டு செல்கிறாய்
நானோ
அலையில் ஆடும் படகாய்.

இனியவன்.ஜி.இளையராஜா

எண்ணக் குமிழ்கள் 5

பெறுவோம் பொறுப்பு அடைவோம் சிறப்பு .

எதையோ பேர் இந்த நாட்டை ஆண்டார்கள் ,போரில் எத்தனையோ பேர் மாண்டார்கள் .

வரலாற்றில் நிற்பது ஒரு சிலர் தானே .ஆணைக்கு அடிபனிபவனாக இருப்பதா? ஆணையிடுபவனாக இருப்பதா ?

முடிவு உன் கையில் .

ஒரு சீன பொதுமொழி ,
டிராகனின் வாலாயிருப்பதா ?
கோழியின் தலையாய் இருப்பதா?

வாலாயிருந்தால் ,ஏதேனும் ஒரு தலையை பின் தொடர வேண்டும் .
தலையாய் இருப்பின் என்ன செய்ய வேண்டும் என்பதை ,நீ தீர்மானிக்க வேண்டும் .

பொறுப்புகள் உன் மீது திணிக்கப் பட்டிருந்தாலும் ,
பொறுப்புகளை நீயாக எடுத்துக் கொண்டாலும் ,

குழுவாக செயல்பாடு ,குறைகளைப் பிரித்தெடு,நிறைகளை குறிப்பிடு .

ஒன்று முக்கியம் ,
முதலில் கற்றுக்கொள் ,பிறகு பெற்றுக்கொள் .


இனியவன். ஜி .இளையராஜா

எண்ணக் குமிழ்கள் 4

கொள்கை கொள் .

இலக்கு இல்லாமல் பயணிக்கும் அம்பு வெற்றியை நிர்ணயிக்குமா ?

பிறந்து விட்டோம் என்று வாழாதே ,நீ பிறந்ததே வாழ்வதற்குத்தான் .

வாழ்க்கை உன்னை எடுத்துச் செல்வதா ? இல்லை ,நீ வாழ்வை எடுத்துச் செல் .
எது வேண்டும் ?எது வேண்டாம் முடிவு செய் .

ஒரு பாறையில் தேவையானதை மட்டும் வரைந்தால் , அது ஓவியம் .
தேவையில்லாததை நீக்கி விட்டால் , அது சிற்பம் .

சிற்பம் வரைவதாயினும் ,ஓவியம் வரைவதாயினும் முதலில் நீ தீர்மானிக்க வேண்டும் .

ஒரு பேருந்து நிலையம் ,
எங்கு செல்வது என்று தெரியாமலேயே நீ சுற்றிக் கொண்டிருந்தால், என்றைக்கும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் .

எந்த ஊருக்கு போவது என்பதை தீமானித்து விட்டால் ,எப்படி அதை சுலபமாக அடைவது ?

அதற்கான முயற்சிகளில் இறங்குவோமானால் , இலக்கை அடைவது எளிது .

கொள்கை கொள் ,தொடு வில் ,வெற்றி இல்லை தொலைவில் .

இனியவன். ஜி .இளையராஜா

Wednesday, January 28, 2009

எண்ணக் குமிழ்கள் 3

தோல்வியைக் கொண்டாடுவோம் .
போட்டி என்று ஒன்று இல்லை என்றால் வெற்றி தோல்வி என்பது கிடையாது .

தோல்வி என்பது ஒன்று இல்லை என்றால் வெற்றியின் இனிமையை அறிய இயலாது .

‘’பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து
பூமா தேவிச் சொன்னாளாம் , நீதான் ஒன்பது முறை எழுந்து நின்ற மாவீரன் என்று ’’.

வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற போட்டி பொறாமையாக மாறக்கூடாது .


நான் சிறு வயதாக இருந்தபோது என் வீட்டிற்கு அடிக்கடி என் தந்தையுடன் பேச வரும் ''டைலர் தாத்தா ’’சொன்னது நினைவுக்கு வருகிறது .

‘’பொறாமை ‘’ என்பது இருக்க கூடாது இருந்தால் அதை திருப்பி போட்ட நிலைதான் என்பார் {மைறபோ }.

தயவு செய்து ,முயற்சிகாதவர்கள் தோல்வியைப்பற்றி பேசாதீர்கள் .

ஒரு வேலை தோற்று விட்டால் என்று நினைத்தே ,சிலர் சோதனைகளை தள்ளி போடுகிறார்கள் .

தோற்று போவதில் கூட வெற்றியைத் துரத்தி தோற்றுப்போக வேண்டும் .அந்த தோல்வி தான் அடுத்த வெற்றிக்கு வித்தாக அமையும் .

வள்ளுவன் சொல்லுவான் ,
‘’யானை பிழைத்த வேல் ஏந்தல் அரிது ”.

{ஒரு காட்டில் முயலை வெற்றிகரமாக பிடித்து விட்டேன் என்பதை விட .ஒரு யானையை வேட்டையாடப் போய் உன் வேலே பறி போவது தான் வீரம் }

இன்று உலக அளவில் பேசப்படுகிற இந்தியர் அமிதாப்பச்சனின் குரல் ஆரம்ப காலத்தில் ,
இலங்கை வானொலியில் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்ட ஒன்று .

அன்று அவர் தோற்காமல் போயிருந்தால்
இன்று இந்த நிலையை அடைந்திருப்பரா ?.

எனவே ,

நண்பர்களே ,தோல்வியைக் கொண்டாடுவோம் .
இனியவன் .ஜி . இளையராஜா

ஒரு கரித் துண்டும் சில வண்ணப் பொடிகளும் .

அந்த
உயர்ந்த ஆலமரத்தின் அடியில்
பேருந்து
நிறுத்தத்திற்கு அருகில்

எனைப் பலமுறைப்
பார்த்திருக்கலாம் .

காய்ந்த தரை
ஒரு கரித்துண்டு
சில வண்ணப் பொடிகள்.

சாலையை யொட்டிய தரை
அடுத்து ஒரு சின்ன மேடை
ஓரமாய் ஒருக் கூடை .

கூடைக்குள் இரண்டு பழைய வேட்டிகள்
ஒரு கிழிந்த துண்டு
என் காதலியின்
பழைய
கருப்பு வெள்ளை
புகைப்படம் .

ஒரு கண்ணாடிக் கோப்பையில்
காலையில்
குடித்தது போக
மீதித் தேநீர்

என் ரொட்டித் துண்டுக்கு காத்திருக்கும்
நான்கு காக்காய்கள் .

சட்டைப் பையில்
நேற்றைய ஓவியத்திற்கான
சில எட்டனாக்களும்,
சில காலனாக்களும் .

பெரும்பாலும் என்
ஓவியங்கள்
கிருஷ்ணனோ ,
சிவனோ இல்லை

என் காதலியின்
காதலின்
முகம் மட்டுமே

இன்று புதிய ஓவியம்
அவளின் தெற்றுப்பல்
தெரியும் சிரிப்பு.

அவள் பார்த்திருந்தால்
வழக்கம் போல்
ஒரு முத்தம் தந்திருப்பாள்

அதற்க்காகவே
பத்துப் படங்களை வரையலாம்

வரைந்த ஓவியத்தை
பல கோணங்களில் பார்கிறேன்

நிழலை பிரதிப் பலிக்கவே
நேரம் எடுத்துக் கொள்கிறேனே ?
அசலை செதுக்க
என் செய்திருப்பன்
பிரம்மன் ?

ஐயோ !!!????????
எங்கிருந்து வந்தது
அந்த மழை

தெறித்து ஓடும் மக்கள் கூட்டம்
ஓடும் வேகத்தில்
ஒருவன்
எனை
கீழே தள்ளிவிட
அடுத்தவன் என் காலை மிதிக்க
கொடுரமான வலி ...

மேடையின்
ஓரமாய் உட்காருகிறேன்
பேய் எனப் பேயும் மழை .

அடைமழையில் அழுகிறேன்.

உற்றுப் பார்பவற்கும் ,
பேருந்து நிலையத் தினின்று எட்டிப் பார்பவர்கும்

நான் அழுவது
கால் வலிக்காக அல்ல
கரையும் காதலியின் ஓவியத்திற்காக .

இனியவன் .ஜி .இளையராஜா

அந்த அதிகாலை .

ஆரம்பிப்பதற்கு
முன்பே
அலுத்துவிடுகிறது
வாழ்க்கை .

குழப்பங்கள்
குமியடிக்க
ஒரு குழந்தையைப்போல்
சுருண்டு உறங்கினேன்

சற்றே மாற்றத்துடன் விடிந்தது
அந்த அதிகாலை

புதிய நபரை
பார்த்த பின்னும்
வள் வள்ளென்று,
குறைக்காத நாய்

தேடாமலே
கிடைத்துவிட்ட செருப்பு
பள்ளி செல்ல
அடம் பிடிக்காத குழந்தைகள்.

குற்றம் கூறி
சண்டை பிடிக்காத மனைவி .


நேரம் தவறாமல் வந்து
நெரிசல் இல்லாத பேருந்து

வியர்வையில் கசங்காத
என் சட்டை .

வணக்கம் சொல்வதற்கு முன்பே
புன்னகையுடன் கைகுலுக்கும் மேலாளர்.

தலைவலிக்கும் முன்பே
கிடைத்த தேனிர்.

தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட
குறுஞ்செய்தி நண்பர்கள் .

போக்குவரத்த்கு
நெரிசல் இல்லாத
சாலைகள்

நுழைவதற்குள்ளகவே
கனிவுடன்
வரவேற்கும்
மனைவி

அன்றைய சமையலில்
எனக்கு பிடித்த உணவு

விளம்பரம் இல்லாத
தொலைக்காட்சித் தொடர்கள்.

சே !
என்னடா ஆச்சு இந்த உலகத்துக்கு ?

தொல்லையின்
வாய் வழி
பிதுங்கி வருவது தானே
வாழ்கை .

கட்டிலின் விளிம்பினின்று
புரண்டு விழுகிறேன்
நான் கீழே விழுந்ததை விட ,
தன் தூக்கம் கலைந்ததாய்
மனைவி கதறுகிறாள் .

ஆஹா
நான் சராசரி வாழ்க்கைக்கு
வந்து விட்டேன்.

இனியவன் . ஜி . இளையராஜா .

பால் வெளித் திரள் .

தூக்கம் விழித்த
பின்னிரவில் ,
வெளிக் காற்று வாங்கி வான் நோக்கினேன்.

எரியும் நட்சத்திரங்கள்
ஏற்றி வைத்த தீபங்களாய் ?

அறிவியல் சொல்கிறது
ஆயிரமாயிரம் சூரியக் கும்பங்கள்
பால்வெளி திரளில்
பயணிக்கின்றதாம்.

அந்தக் குடும்பங்களில்
பூமி இருக்குமா ?
எனில்,

மனித வளர்ச்சி ?
மொழி வளர்ச்சி ?
அறிவியல் ?

தீயைக் கண்டறிந்திருப்பனா ?
திராவிடம் வளர்திருப்பனா ?
அங்கே
தமிழ் இருக்குமா ?
காதல் ?
கவிதை ?
இசை ?

அரசியல் ?
மதம் ?
சாதி?
தீண்டாமை ?


பொறாமை ?
இன வேற்றுமை ?
மொழிக் கூச்சல் ?
நிலக் கோட்பாடு ?
நீருக்குப் போராட்டம் ?

திருட்டு ?
விபச்சாரம் ?
தீவிரவாதம் ?
கல்விக்கு கட்டணம் ?
வரதட்சணை ?
விதி மீறல் ?

எது இருக்கிறதோ இல்லையோ

வேலை கிடைக்குமா ?

விண்ணப்ப படிவம்
எங்கே கிடைக்கும் ?

கையுட்டு ஏதும்
தேவைப் படுமா ?

விபரம்
அறிந்தவர்
தொடர்புக் கொள்க ????????????????????????????

விழிப்புடன்
மனிதன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இனியவன் .ஜி .இளையராஜா .