Tuesday, April 28, 2009

வானவில் கிளியே

என் கிரகத்தில் இறங்கிய
செயற்கைக்கோள் நீ
சரியான தளத்தில் இறங்கியதால்
பேருவகை கொள் நீ

நேற்றுவரை என் கிரகத்தில்
நாதஸ்வர இசைகள் இல்லை
இராட்சச காற்றாடிகளின்
விசைகள் இல்லை

கற்பனையில் வந்த தேவதைகள்
இன்று கண்ணடித்து செல்ல
வானிலை ஆய்வாளன்
சொல்லாத புயலொன்று
என் வாழ்வில் வீசுதடி

வவ்வால்கள் ஒலியெல்லாம்
என் காதில் கேட்குதடி
சோதிட கட்டங்கள்
சாதகமாய் இருக்குமா ?
சொல்லிவிட்டுச் செல்லடி
என் வானவில் கிளியே.

பூபாளம் பாடும் முன்
கண் விழிக்கிறேன் .
புல் நுனியில் நின்று
கவிதை வரைகின்றேன்.

திடிரென,
எனக்குள் ஏற்பட்ட மாற்றமா ?
இதுவேதான் காதலுக்கு தேற்றமா?

இனியவன் .ஜி.இளையராஜா

நிலாக் காலம்

புல்லாங்குழல்
துளைகள் நீ
உன்னில் ஊடுருவும்
காற்று நான்
இசையானோம் .

அழகிய அலைகள் நீ
பதிந்த சுவடுகள் நான்
கரைந்து போனோம்.

நீர்நிலை
நீ
குளிர்நிலை
நான்
உறைந்து போனோம் .

உன்னில் நானும்
என்னில் நீயும் உணர்வுகளில்
மறைந்து போனோம்.

சிப்பி நீ
மழை துளி நான்
முத்தானோம்.

விழி நீ
ஒளி நான்
கட்சியானோம்.

வார்த்தை நான்
பொருள் நீ
மொழியானோம்

புள்ளியாய் நீ
கோடுகளாய் நான்
கோலமானோம் .

எதிர்ப்புகளை
மீறாததால்
வெவ்வேறு குடும்பமாகி
காதலில் காலமானோம்.


இனியவன் .ஜி.இளையராஜா

கறி சமைப்போம் வா !

வலிகள் தான் வாழ்க்கை
வளைந்து கொடுப்போம்.
வண்ணத்துப்பூச்சியாய் வாழ்ர்ந்து பார்போம்.

மொழி பேசும் ஊமையாய்
விழி நீரை துடைத்து
இடி தாங்கிய வாழ்வு
இன்றோடு முடியுமா?

காளான் கீழ் வாழும்
சூரியனாய் இல்லாமல்
கற்பனையிலாவது நாம் கவலை மறப்போம்.

காட்சிகள் மட்டுமே வேறு
கலங்கரை இல்லாத கடலலை கப்பலாய்
தினம் கவலைகள் நூறு.

சோம்பலாய் இருந்து
சாம்பல் ஆகாமல்
புண்ணுக்கு மருந்திட்டது போதும்
வா !போருக்குப் போவோம்.

விண்மீன் வெளிச்சங்கள் போதும்
விரக்தியை விரட்ட,
சிறுமீன் போதும் சுறாக்களை பிடிக்க

எண்ணங்களை தூசு தட்டி
தன்னம்பிக்கை வண்ணம் பூசு
வெளிச்சங்கள் உன் வாழ்வில்
தானாய் தீந்தேனாய் வரும்.

உன்னை பகுத்த வாழ்வை
வரிசைப் படுத்து ,
உந்தன் வலிகளை எல்லாம்
வாரி இசைப் படுத்து.

வீறு கொண்டு வா
அணி அமைப்போம்
கவலை காய்களை அறுத்து
மகிழ்ச்சி கறி சமைப்போம்.

இனியவன் .ஜி.இளையராஜா

புதியதொரு நிலவு செய்வோம் !

இரவின் நிலவினை இரவல் வாங்காமல்
இன்னுமொரு நிலவு செய்வோம் !
இருண்ட வறுமையை இல்லாமல் செய்ய,

சிவப்புக் கோட்டில்
பச்சை விளக்கெரிய,
பூமி முழுதும் பயிர் செய்வோம்
புன்னகை மட்டும் கொண்ட
உயிர் செய்வோம்.

களத்து மேட்டில்
வறண்டு போன நிலத்தில்
உழவனின் திருவடியும்,
காளையின் குளம்படியும்,
நேற்று கண்டேன்.

வா! நாளை மழை வந்து
கரையும் முன்பாய் ,
புகைப்படம் எடுத்து கோப்பிடுவோம்,
சமகாலத் தோழர்களை கூப்பிடுவோம்.

கணினி காதலன் எனக்கும்
கலப்பை பிடிக்க ஆசை .
வா! சேர்ந்து செய்வோம் உழவு பூசை.

நாளை அந்த புகைப்படம்,
வெறும் கண்காட்சி,
இந்திய விளைச்சலுக்கு,
இனி நம் மண் சாட்சி .
இனியவன் .ஜி .இளையராஜா